கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

By: 600001 On: Jan 26, 2024, 4:26 PM

 

கனடாவுடனான புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் பிரித்தானிய அரசாங்கம் பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சுசன்னா கோஷ்கோ, நிரந்தர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை எதிர்பார்க்கும் போது வியாழனன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், பிரித்தானிய மக்களுக்கான ஒப்பந்தங்கள் குறித்து மட்டுமே அவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று கூறினார். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

எதிர்காலத்தில், அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் உள்ள வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும் வலுவான வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவதற்காக கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் பரஸ்பர ஒப்பந்தம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கனேடிய வர்த்தக அமைச்சர் மேரி எங் அலுவலகம் பதிலளித்துள்ளது. எங்கள் விவசாயத் தொழிலுக்கான சந்தை அணுகலை இங்கிலாந்து தடுக்கிறது என்று அறிக்கை குற்றம் சாட்டுகிறது.