இஸ்ரேலியப் படைகள் ரஃபாவின் மேற்கே நியமிக்கப்பட்ட "பாதுகாப்பான வலயத்தில்" ஒரு முகாம் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதில் 13 பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த சில மணித்தியாலங்களில் எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள ரஃபா நகரின் தெற்குப் பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஃபா நகரின் மையத்தில், துப்பாக்கிச் சூட்டில் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் சிக்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் உள்ளன. இஸ்ரேலிய குவாட்கோப்டர்கள் அங்குள்ள மக்களைப் பின்தொடர்வதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவதைத் தடுத்ததாகவும் அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
ரஃபாவின் வடகிழக்கில் இருந்து வடமேற்கு வரையிலான முகாம்கள் அண்மைய நாட்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் நிலைமை மணிநேரம் மோசமாகி வருகிறது. அதே நேரத்தில், பாலஸ்தீனியர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளும் மறுக்கப்படுகின்றன.