இந்த கோடை காலத்தில் குறிப்பிட்ட சில ஐரோப்பிய இடங்களுக்கு பயணிக்கும் கனேடிய குடிமக்களுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பாவில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிக அளவில் இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பல ஐரோப்பிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்போது ஐரோப்பாவில் வேறு இடங்களில் அதிக தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், இத்தாலியில் தாக்குதல்களை நிராகரிக்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள், இதர போக்குவரத்து மையங்கள், சுற்றுலாத் தலங்கள், உணவகங்கள், பார்கள், சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம் உள்ளதால், குடிமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பின்னரே ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிவிப்புகளின் அடிப்படையில் மட்டுமே மக்கள் பயணம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை மேலும் கூறுகிறது. ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.