டிஜிட்டல் பயணத் தளமான 'Agoda' நடத்திய ஓர் ஆய்வின்படி, நவீன காலப் பயணிகள் நிலையான சுற்றுலாவுக்கு (Sustainable travel) அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆசியாவைச் சேர்ந்த ஒன்பது நாடுகளைச் சேர்ந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நிலையான சுற்றுலாவை மிகவும் முக்கியமாகக் கருதும் பயணிகளின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது; இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
தாய்லாந்துப் பயணிகளில் 95 சதவீதம் பேர் நிலையான சுற்றுலாவை முக்கியமானதாகக் கருதுகின்றனர். 93 சதவீதத்துடன் இந்தோனேசியா அடுத்த இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தலா 88 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
மேலும் அதிகமான மக்கள் தங்கள் பயணங்களை தனித்துவமான அனுபவங்களாக மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர். தாங்கள் பயணிக்கும் இடங்களிலுள்ள உள்ளூர் சமூகங்களுக்கு, அப்பயணங்கள் பயன் அளிப்பதாக அமைய வேண்டும் என்றும் பலர் கருதுகின்றனர்.