வீடுகளுக்குள் புகுந்து திருடுவதற்கு திருடர்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாக யார்க் பிராந்திய காவல்துறை எச்சரித்துள்ளது. ஒன்டாரியோவின் வான் நகரில் உள்ள வீட்டு உரிமையாளர்களின் அன்றாட நடவடிக்கைகளை ரகசியமாகப் பதிவு செய்வதற்காக, கேமராக்களும் பேட்டரி பேக்குகளும் பொருத்தப்பட்டிருப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்த சாதனங்கள், மரங்கள் மற்றும் செடிகளுக்கு மத்தியிலும், பசுமையான இலைகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவற்றைக் கண்டறிய முடியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் எப்போது வெளியே செல்கிறார்கள், எப்போது திரும்புகிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து, திருட்டுகளைத் திட்டமிட இதுபோன்ற கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள், இலைகளுக்கு இடையில் மறைக்கக்கூடிய 'காமோஃப்ளாஜ்' பூச்சு கொண்ட கேமராக்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தங்கள் வீடுகளுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ அறிமுகமில்லாத பொருட்களையோ அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்களையோ கண்டால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு உள்ளூர் மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறும், தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.