குடியேற்றத் திட்டங்களில் பரவலான மோசடிகள் நடைபெறுவது குறித்த தணிக்கை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, ஒன்ராறியோ மாகாணம் தனது வெளிநாட்டுத் தொழிலாளர் திட்டத்தில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. தற்போதுள்ள 'ஒன்ராறியோ குடியேற்றப் பரிந்துரைத் திட்டத்தின்' (OINP) கீழ் இருந்த ஒன்பது குடியேற்றப் பிரிவுகளையும் மாகாணம் ரத்து செய்துள்ளது. தகுதியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான பரிந்துரைகளை வழங்கும் இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், விசா மோசடிகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும் இந்தச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய திருத்தங்களின் கீழ், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள், அதிகத் தேவையுள்ள திறன் கொண்டவர்கள் மற்றும் முதுகலை மற்றும் முனைவர் (PhD) பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட ஒன்பது முக்கிய பிரிவுகளை ஒன்ராறியோ முழுமையாக ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, மிகவும் வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த புதிய அமைப்பை மாகாணம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய சட்டத்தின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பரிந்துரை (sponsor) வழங்க விரும்பும் வேலையளிப்பவர்கள் OINP இயக்குநரிடம் பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மை மற்றும் வணிகப் பின்னணி ஆகியவை குறித்த கடுமையான ஆய்வுகளுக்குப் பின்னரே, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க அவை அனுமதிக்கப்படும்.
குடியேறியவர்களைச் சுரண்டும் போலி குடியேற்ற முகவர்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வேலையளிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாகாணம் திட்டமிட்டுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான அபராதம் விதிப்பதுடன், மூன்று ஆண்டுகள் முதல் வாழ்நாள் வரை தடை விதிக்கும் வகையிலும் புதிய திருத்தம் வகை செய்கிறது. சட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், தற்போது விண்ணப்பிக்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சட்ட மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு சற்று முன்பு வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், பழைய விதிமுறைகளின் அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று ஒன்ராறியோ குடியேற்றத் துறை அறிவித்துள்ளது.