கனடா முழுவதும் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. தேசிய காட்டுத்தீ குறித்த அறிக்கையின்படி, தற்போது 950-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இவற்றில் சுமார் 241 தீ விபத்துகள் முற்றிலும் கட்டுப்பாடில்லாமல் உள்ளன. காட்டுத்தீயால் கனடாவின் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா முதல் கியூபெக் மற்றும் வடமேற்குப் பிரதேசங்கள் வரையிலான பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை மின்னல் தாக்கியதால் ஏற்பட்டவை. சுமார் இரண்டு சதவீத தீ விபத்துகள் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறியுள்ளன. வான்கூவருக்கு வடக்கே உள்ள பிக் பார் லேக் (Big Bar Lake) மற்றும் மெடோ லேக் (Meadow Lake) பகுதிகளில் காட்டுத்தீ குடியிருப்புப் பகுதிகளுக்குப் பரவியதைத் தொடர்ந்து, 130-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மனிடோபாவிலும் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. ஜூன் 26 அன்று, ஓ-பிபோன்-னா-பிவின் க்ரீ நேஷன் (O-Pipon-na-Piwin Cree Nation) என்ற தொலைதூர கிராமத்திலிருந்து சுமார் 600 பேர் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் புகை காரணமாக காற்றின் தரம் குறைந்துள்ளதோடு, பார்வைத்திறனும் (visibility) பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் ஃபோர்ட் சிம்ப்சன் (Fort Simpson) மற்றும் ரிக்லி (Wrigley) பகுதிகளில் இருந்து 1,400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் தற்போது எல்லோநைஃப் (Yellowknife) நகரில் தங்கியுள்ளனர். வரும் நாட்களில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் சுமார் 200 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு முழுவதும் ஏற்பட்ட பாதிப்பை விட, இந்த ஆண்டில் காட்டுத்தீயால் அதிக நிலப்பரப்பு அழிந்துள்ளது. வடக்கு ஒன்ராறியோவிலிருந்து வெளியேறிய மக்கள் தண்டர் பே (Thunder Bay) நகரிலுள்ள விடுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட தீயணைப்புக் குழுக்களும் ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
ஹாலிஃபாக்ஸின் வடகிழக்கே மூஸ்லேண்ட் சாலையில் (Mooseland Road) தொடங்கிய காட்டுத்தீ, சுமார் 14 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவியுள்ளது. நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்ட நீர் வீசும் விமானங்கள் (water bombers) மற்றும் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.