ஒட்டாவா: கனடாவின் சர்வதேச மாணவர் விசா மற்றும் பணி அனுமதித் திட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, இந்தியாவைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அந்நாட்டில் தனது நிழல் உலக வலைப்பின்னலை விரிவுபடுத்தியுள்ளதாக கனடா எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) ரகசிய உளவுத்துறை அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
பிஷ்னோயின் முக்கிய கூட்டாளியான கோல்டி பிரார், 2017-ல் படிப்பதற்காக என்ற போர்வையில் கனடாவுக்கு வந்திருந்தாலும், அவர் உண்மையில் கல்வி பயின்றதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அதேவேளையில் கனடாவில் அக்கும்பலின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
CBSA-வின் உளவுப்பிரிவு மதிப்பீட்டின்படி, படிப்பு மற்றும் பணி அனுமதிகளுடன் கனடாவுக்கு வரும் சில இந்திய இளைஞர்கள் இக்கும்பலால் ஆட்களாகச் சேர்க்கப்பட்டு, கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல் போன்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளையில், மிகச் சிறிய குழுவினர் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும், பெரும்பாலான சர்வதேச மாணவர்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.