அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் (Phoenix) நகரில், ஒரே விமான எண்ணுடன் பறந்த இரண்டு விமானங்கள் பெரும் விபத்திலிருந்து நூலிழையில் தப்பின. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் (air traffic controller) சரியான நேரத் தலையீட்டால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது. 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் 2482 என்ற விமான எண்ணைக் கொண்ட இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் செயல்பாட்டில் இருந்தன.
மோசமான வானிலை காரணமாக சிகாகோவிலிருந்து வர வேண்டிய விமானம் தாமதமானதே இந்தக்குழப்பத்திற்குக் காரணமாக அமைந்தது. அந்த விமானம் வருவதற்கு முன்பே, அதே விமான எண்ணுடன் ஃபீனிக்ஸிலிருந்து மற்றொரு விமானம் புறப்பட விமான நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. இதனால், ஒரே 'கால் சைன்' (call sign) அல்லது அடையாளக் குறியீட்டைக் கொண்ட இரண்டு விமானங்கள் ஒரே வான்வெளியில் வந்ததால், அவை மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.
இருப்பினும், ஆபத்தை உணர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், வருகை தரும் மற்றும் புறப்படும் விமானங்களைச் சரியாக அடையாளம் கண்டு விமானிகளுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். தரையிறங்க வந்த விமானத்தை அதிக உயரத்தில் இருக்குமாறும், புறப்பட்ட விமானத்தை மேலும் உயரத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். கட்டுப்பாட்டாளர் மற்றும் விமானிகளின் விழிப்புணர்வால் இரண்டு விமானங்களும் தங்கள் பயணத்தைத் பாதுகாப்பாகத் தொடர்ந்தன. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை அறிவித்துள்ளன.