போலி ஆவணங்களைத் தயாரித்து பலருக்கு விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக, மாண்ட்ரியலைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடா எல்லைச் சேவை முகமையின் (CBSA) விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி 2022 மற்றும் மார்ச் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 60 பேருக்கு போலி விசாக்கள் மற்றும் அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்களைத் தயாரிக்க இவர் உதவியதே இவர் மீதான முக்கிய குற்றச்சாட்டாகும். மேலும், போலி விசாக்களைப் பயன்படுத்தி 53 பேர் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கும் அங்கு தங்குவதற்கும் இவர் வழிவகுத்ததாக விசாரணை முகமை தெரிவித்துள்ளது.
நான்கு போலி கனடிய கடவுச்சீட்டுகளைப் (passports) பயன்படுத்தி ஆதரவு கடிதங்களை (sponsorship letters) உருவாக்கியதன் மூலம் இவர் மோசடியில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. கனடா, பிரான்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்ட ஒரு முன்னணி குடியேற்ற ஆலோசகராகத் தன்னை இவர் முன்னிறுத்திக்கொண்டார். மே 2025-இல், இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கண்டறிந்தனர். சதித்திட்டம் தீட்டுதல், சட்டவிரோத நுழைவுக்கு உதவுதல் மற்றும் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து தீவிர குற்றச்சாட்டுகள் காசிம் (Kasim) மீது சுமத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், காசிம் ஜூன் 2025-இல் கனடாவை விட்டு வெளியேறிவிட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.