செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், காலதாமதத்தைத் தவிர்க்கவும் CSIS (கனடிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவை) தனது ஆள்சேர்ப்பு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ ஆவணங்களை மேற்கோள் காட்டி CBC News இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது, CSIS-இல் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கும், பாதுகாப்பு அனுமதி (security clearance) பெறுவதற்கும் 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகிறது. ஒரு பணியாளர் குறுகிய கால அறிவிப்பில் வேலையை விட்டு விலகினால், அவருக்குப் பதிலாக மற்றொருவரை நியமிக்க பல ஆண்டுகள் ஆகும் நிலை உள்ளது. இச்சவால்களைச் சமாளிக்கவும், வெளிப்பணியாளர் நியமனத்தை அதிகரிக்கவும், பயிற்சி காலத்தைக் குறைக்கவும் அந்த அமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்களைப் பரிசீலித்தல் மற்றும் உளவியல் மதிப்பீடுகள் போன்ற ஆள்சேர்ப்பு தொடர்பான நடைமுறைகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் உள்ள பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கவும் அந்த அமைப்பு அனுமதிக்கிறது. சில குறிப்பிட்ட பதவிகளுக்கு, அதிகாரப்பூர்வ மொழித் தேவைகள் தொடர்பான விதிமுறைகளிலும் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதம், வெளிநாட்டுத் தலையீடு மற்றும் உளவு பார்த்தல் உள்ளிட்ட பாதுகாப்புச் சவால்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த முக்கிய மாற்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன.