தெஹ்ரான் காவல்துறையில் முன்னாள் லெப்டினன்ட்டாகப் பணியாற்றிய, கனடாவில் போலிப் பெயரில் வசித்து வந்த நபர் ஒருவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் மீதான தடைகளைத் தவிர்ப்பதற்காகச் செயல்பட்ட குற்றவியல் வலையமைப்பில் முக்கியப் பங்காற்றிய அமின் யூசெஃபிஜாம் (Amin Yousefijam) என்பவரை நாடு கடத்துமாறு குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் (Immigration and Refugee Board) உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஈரான் மீது விதித்த ஏற்றுமதித் தடைகளை மீறுவதில் அமின் முக்கியப் பங்காற்றியதை அந்த வாரியம் கண்டறிந்தது. ஆயுதத் தயாரிப்புக்குக் பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு உபகரணங்கள், மோட்டார்கள் மற்றும் பிற பொருட்களை ஈரானுக்கு அனுப்பும் தளவாட ஏற்பாடுகளுக்கு அவரே பொறுப்பாக இருந்தார்.
2016-ல் கனடாவுக்கு வந்த அவர், பின்னர் அமெரிக்காவில் பிடிபட்டார். அங்கு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பிறகு, அவர் தனது பெயரை "அமீன் கோஹன்" (Ameen Cohen) என்று மாற்றிக்கொண்டார். இருப்பினும், பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தபோது, தனது குற்றப் பின்னணியை அவர் வேண்டுமென்றே மறைத்ததை வாரியம் கண்டறிந்தது.
2021-ல் கைது செய்யப்பட்ட இந்த நபருக்கான நாடு கடத்தல் நடவடிக்கைகள், 2024 செப்டம்பரில் தொடங்கி 2025 பிப்ரவரியில் நிறைவடைந்தன. அவர் தற்போது கனடாவிலேயே இருப்பதாகவும், சட்டரீதியாக வேறு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளனவா என்று ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு முதல், ஈரான் நாட்டின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. கனடா எல்லைச் சேவை முகமை (CBSA) இத்தகைய 40 அதிகாரிகளைக் கண்டறிந்துள்ளது; அவர்களில் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர், எட்டு பேர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.