புவேர்ட்டோ ரிக்கோ: புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ, மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வென்றுள்ளார். டொமினிகன் குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்திய மெலிசா நுனெஸ் இரண்டாவது இடத்தையும், வெனிசுலாவைச் சேர்ந்த கிளாரா வேகாஸ் கோய்ட்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 116 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற 75-வது மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டி, புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரலோட் கொலிசியத்தில் நடைபெற்றது. மெக்சிகோவைச் சேர்ந்த நடப்பு அழகி ஃபாத்திமா போஷ், புதிய மிஸ் யுனிவர்ஸுக்கு கிரீடம் சூட்டினார்.
'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' பட்டத்தை வென்ற முதல் மலையாளிப் பெண்ணான கெசியா லிஸ் மெஜோ, முதல் 12 இடங்களுக்குள் முன்னேறத் தவறிவிட்டார். இதன் மூலம், இந்தியா தனது நான்காவது மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது. ஆலப்புழாவின் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான கெசியா, ஆரம்பச் சுற்றுகள் மற்றும் தேசிய உடை (நேஷனல் காஸ்டியூம்) சுற்றின் போது, கேரளத்தின் பாரம்பரிய 'கசவு' புடவை, ஜிமிக்கி, தென்னை மரங்கள் மற்றும் படகு வீடுகள் (ஹவுஸ்போட்) போன்ற அம்சங்களை உள்ளடக்கிய தனது உடையின் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்தார். அவரது அந்த உடை, கேரளத்தின் தனித்துவமான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மிக அழகாக வெளிப்படுத்தியது.